திட்டமிட்டப்படி 24–ந் தேதி முக்கிய அறிவிப்பு ஆதரவாளர்களுடன் ஜெ.தீபா தீவிர ஆலோசனை
அரசியலில் இறங்குவது குறித்து திட்டமிட்டபடி 24–ந் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படப்போவதாக தெரிவித்த நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஜெ.தீபா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, 24–ந் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, தீவிர அரசியலில் இறங்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதனிடையே சென்னை தியாகராயநகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு தினமும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து தங்களுடைய அரசியல் அனுபவங்கள் குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய கோப்புகளை வழங்கி வருகின்றனர். அவர்களுடைய பெயர்கள், மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பூந்தமல்லி நகர செயலாளர் டி.தேவேந்திரன்–முன்னாள் நகரசபை தலைவர் மணிமேகலை தம்பதிகளின் இல்ல திருமண விழா மாங்காட்டில் நேற்று நடந்தது. அதில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஆலோசனை
தியாகராயநகரில் உள்ள தன்னுடைய வீட்டில், பொள்ளாச்சி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த ஆதரவாளர்களை தீபா, சந்தித்து, அவர்களுடைய கருத்துகளை கேட்டறிந்தார்.
ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், 24–ந் தேதி அறிவிக்கும் அறிவிப்பு அனைத்து தரப்பினரையும் கவர வேண்டும் என்பதற்காக நேற்று இரவு தன் ஆதரவாளர்களுடன் தீபா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆரோக்கியமான அரசியல்
இதுகுறித்து தீபாவின் வீட்டுக்கு வந்த ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:–
தமிழகத்தில் சில நாட்களாக நடந்து வரும் அரசியல் சூழ்நிலைகளை தீபா உன்னிப்பாக கவனித்து வருகிறார். திட்டமிட்டப்படி 24–ந் தேதி அரசியல் பயணம் குறித்து முக்கிய முடிவுகளையும், கொள்கைகளையும் அறிவிக்க உள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்ல இருக்கிறோம்.
எங்கள் அரசியல் பயணம் தமிழகத்தை மேம்படுத்துவதுடன், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையிலும் இருக்கும். தீபாவின் நிர்வாக ஆளுமையை பயன்படுத்தி, ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வை திட்டங்கள் அனைத்தும், தமிழக நலன் கருதி நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply