248 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நாளை வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றங்கள் 248 க்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகலுடன் அது நிறைவடையவுள்ளது.நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் 341 இல் 93 சபைகளுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யும் அறிவித்தல் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதற்கிணங்க குறித்த சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமானதுடன் 14 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது.
இதேவேளை வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அறிவித்தல் கடந்த நான்காம் திகதி வெளியான உள்ளூராட்சி மன்றங்கள் 248 இற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுக்கு வரவுள்ளது.
எனவே நாளை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் வரையும் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ள 248 உள்ளூராட்சிமன்றங்களுக்கான வேட்புமனு தயார் செய்யும் பணியில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இதேவேளை குறித்த சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடைபெறும் தினம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொகுதிவாரி மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு தேர்தல் முறையூடாக இம்முறைநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கென 341 உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்மன்றங்களுக்கு எண்ணாயிரத்து முன்னூற்று ஐம்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இதேவேளை இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டில் முன்னூற்று முப்பத்தைந்து உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம்மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஆகவே புதிய தேர்தல் முறையூடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட ஆறு உள்ளூராட்சி மன்றங்கள் மேலதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க அகரபதன, கொட்டகல, மஸ்கெலிய, நோர்வூட், பொலநறுவை ஆகிய பிரதேச சபைளும் பொலநறுவை மாநகர சபையுமே புதிய உள்ளூராட்சி மன்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே தற்போது நாட்டில் மொத்தமாக இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும், 24 மாநகர சபைகளும், நாற்பத்தொரு நகரசபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply