தற்காலிக நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் டிரம்ப்: அரசுத் துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது

அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 60 ஓட்டுகளைப் செனட் சபையில் பெற இயலவில்லை. எல்லை பாதுகாப்பு மற்றும் கனவுகளுடன் புதிதாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான தங்களது விருப்பத்துக்கு அரசு மதிப்பளிக்காததால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசுப் பணிகள் முடங்கின.

எனவே, அரசுப் பணிகள் தொய்வின்றி நடத்துவதற்காக தற்காலிக நிதி அளிக்கும் மசோதா நேற்று கொண்டு வரப்பட்டது. இதற்கு செனட் சபையும் பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக செனட் சபையில் 81 பேர் வாக்களித்தனர். எதிர்த்து 18 பேர் வாக்களித்தனர். அதேசமயம் இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் ஆதரவாக 266 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் பெற்றது.

இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி அந்த மசோதாவில் கையெழுத்திட்டார். இதையடுத்து அரசுப் பணிகள் முடக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிதி இரண்டரை வாரங்களுக்கு, அதாவது பிப்ரவரி 8-ம் தேதி வரை மட்டுமே உள்ளது. எனவே, அதுவரை அரசுப் பணிகள் எந்த தடங்கலும் இன்றி நடைபெறும்.

அதற்குள் எதிர்க்கட்சிகளை சமாதானம் செய்து நீண்டகால வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் பெறும் முயற்சியில் ஆளுங்கட்சியான குடியரசு கட்சி ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply