குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குடியரசு தினம் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு, மாநிலங்கள் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ராஜபாதையில் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். இதில் இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, மியான்மர் தலைவர் ஆங்சான் சூகி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

இந்த விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் முயற்சியில் ஈடுபடக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள், அல்கொய்தா மற்றும் அதன் ஆதரவு பெற்ற சர்வதேச பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை அரங்கேற்றக்கூடும என அறிவுறுத்தி உள்ளது.

இதைப்போல சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தங்கியிருக்கும் ரோஹிங்யாக்கள் மூலமும் குடியரசு தினவிழாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. பாராளுமன்றம், டெல்லி மாநில தலைமை செயலகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் ரெயில், பஸ் நிலையங்கள், சந்தைகளும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவுத்துறை நிறுவனங்களும், டெல்லி மாநில போலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் பாதுகாப்பாகவும், சீராகவும் நடைபெறுவதற்கு வசதியாக அந்த பகுதிகளுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள் மற்றும் வாகனங்கள் மூலம் நடத்தப்படும் எந்தவித அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் தயாராக வைக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லியில் வெளிநாட்டவர் அடிக்கடி தங்கும் பகர்கஞ்ச் மற்றும் பழைய டெல்லி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் பலத்த சோதனை நடத்தி வரும் அதிகாரிகள், அந்த பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதைப்போல தெற்கு மற்றும் தென்மேற்கு டெல்லியில் உள்ள ஓட்டல்கள், விடுதிகளும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

மேலும் டெல்லி மற்றும் தலைநகர் பிராந்திய பகுதிகளில், சிமி அமைப்பு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள், நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சட்ட விரோத குடியேற்றவாசிகள் தங்கியிருக்கும் குடிசை பகுதிகள், அங்கீகரிக்கப்படாத காலனிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply