என்னை தாக்கிய கொள்ளையர்களை சும்மாவிடக்கூடாது’ பெண் என்ஜினீயர் வாக்குமூலம்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லாவண்யா (வயது 26). இவர் நாவலூரில் உள்ள கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த திங்கட்கிழமை அவர் பணிமுடிந்து பெரும்பாக்கம் நுக்கம்பாளையத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் மொபட்டில் நாவலூரை அடுத்த தாழம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.
ஒட்டியம்பாக்கம்-அரசன்கழனி- காரணை சாலையில் சென்றபோது இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த வழிப்பறி கும்பல் லாவண்யாவை மடக்கி சாலையோர முட்புதருக்குள் தூக்கிச்சென்று இரும்பு கம்பியால் கொடூரமாக தலையில் தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவரிடம் இருந்து நகைகள், செல்போன் மற்றும் மொபட்டை எடுத்துக்கொண்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது.
சாலையோரத்தில், ரத்த வெள்ளத்தில் கிடந்த லாவண்யாவை ரோந்து போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, செம்மஞ்சேரியில் உள்ள மதுபான கடையில் நின்று கொண்டிருந்த லாவண்யாவின் மொபட்டை போலீசார் மீட்டனர்.
இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியது. இதைத்தொடர்ந்து அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், என்னை இரும்பு கம்பியால் தாக்கி இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கொள்ளையர்களை சும்மா விடக்கூடாது. அவர்கள் மனிதநேயமற்றவர்கள். எனக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடக்க கூடாது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது கடுமையான சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
வாக்குமூலம் அளிக்கும்போது அவரால் பேச முடியவில்லை, அழுது கொண்டே இருந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply