சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்பு

சிங்கப்பூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முடிந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றார்.சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் 164 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 1978-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு இக்கோயிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தது. இதையடுத்து, 1979, 1992, 2005 என 3 முறை சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ரூ.29 கோடி செலவில் 4-வது முறையாக இக்கோயிலை சீரமைக்கும் பணி கடந்த 2016-ல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்து அறநிலைய வாரியம் சார்பில் இப்பணி நடந்தது. இப்பணியில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களும் ஈடுபட்டனர்.

சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, குடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீர், 9 கோபுர கலசங்கள் மற்றும் கருவறையில் உள்ள பெருமாள் சிலை மீது தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பிய அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார். இவர் 2004-ல் பிரதமரான பிறகு கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பது இதுதான் முதல்முறை.

மேலும் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், கலாச்சார அமைச்சர் கிரேஸ் பு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜனில் புதுச்சீரி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

இதுகுறித்து அமைச்சர் ஈஸ்வரன் கூறும்போது, “இங்குள்ள பல்வேறு மத, இன மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும்” என்றார்.

ஆலய நிர்வாகக் குழு தலைவர் வெள்ளையப்பன் (73) கூறும்போது, “கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து அடுத்த 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். இந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply