அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படும் விவகாரம் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் பசுக்கள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பி, வன்முறையில் ஈடுபடுவதும், அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும், அடித்துக் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பசுக்காவலர்கள் என்ற பெயரில், பசுவை கடத்துகிறார்கள், பசுவை இறைச்சிக்காக அடித்துக்கொல்கிறார்கள் என்று கூறி அப்பாவி மக்களை அடித்துக்கொல்லும் சம்பவங்கள், வட மாநிலங்களில் அதிகளவில் நடந்து வருகின்றன.__
இது தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 17-ந்தேதி விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதையடுத்து மத்திய அரசு அதிரடியில் இறங்கி உள்ளது.
அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படுவதை தடுப்பதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்; இது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கவும் சிறப்பு பணி குழுக்களை அமைக்க வேண்டும்; இதன் மூலம் அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப் படுவதை தடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பான கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்து உள்ளது.
மேலும், இதன் பேரில் நடவடிக்கை எடுத்து, அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதில், அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது குறித்து சட்டம் ஒன்றை இயற்றலாமா என்று பரிசீலிக்க மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எதிரொலித்தது. இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினார். அப்போது அவர், அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரது தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதில் அளித்தார். அப்போது அவர், “பல்வேறு மாநிலங்களிலும் அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்களை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு உள்ளது. தேவைப்பட்டால் இதற்காக புதிய சட்டம் இயற்ற அரசு தயாராக இருக்கிறது” என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply