வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி: டாலருக்கு எதிரான ஈரான் ரியால் மதிப்பு 1 லட்சத்து 28 ஆயிரமாக சரிவு
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்ற அளவில் சரிந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து. பொருளாதார சிக்கலும், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் பெரும் நெருக்கடிக்கு ஈரான் ஆளாகியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
இதுமட்டுமின்றி உலக நாடுகள் ஈரானுடன் உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் தேக்கத்தால் ஈரான் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரான் ரியாலின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.
கடந்த ஜனவரி 1-ம் தேதி ஒரு டாலர் 35,186 ரியாலாக இருந்தது. மார்ச் மாதம் 50,000-க்கும் கீழ் சரிந்தது. அதிலிருந்து நான்கு மாதங்களில் மேலும் பாதியாக சரிவடைந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் ரியாலின் மதிப்பு, ஒரு டாலர் 98,000 ரியால் என்ற அளவில் சரிந்தது. பின்னர் இத, ஒரு டாலர் 1.12 லட்சம் ரியால் என்னும் அளவுக்கு சரிந்தது. இது ஈரான் வரலாற்றில் இல்லாத சரிவாக வர்ணிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஈரான் ரியாலின் மதிப்பு தற்போது மேலும் சரிவடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு தற்போது, மீண்டும் வரலாறு காணாத சரிவை சந்திதுள்ளது.
ஒரு டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்ற அளவில் சரிந்துள்ளது. இது 50 சதவீத அளவுக்கு சரிவாகும். அமெரிக்க டாலருக்கு எதிராக மற்ற நாடுகளின் நாணயம் இந்த அளவுக்கு சரிவை சந்தித்து வருவது இதுவரை இல்லாத ஒன்றாகும்.
நாணய மதிப்பு சரிந்து பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசுக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்து வருவதால் பெரும் நெருக்கடிக்கு அந்நாடு ஆளாகி வருகிறது.
ஈரான் நிதியமைச்சர் மசவுத்தை பதவி நீக்கம் செய்யும் தீ்ர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.பிக்கள் கொண்டு வந்தனர். அதிபர் ரவுகானிக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 71.20 ரூபாய் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply