ஜெயலலிதாவுக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் உள்ளனரா? வருமான வரித்துறை தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1997-1998-ம் ஆண்டு தனக்கு 4.67 கோடி ரூபாய் மதிப்புக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வருமான வரித்துறையிடம் கணக்கு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் 7.27 லட்சம் ரூபாய் சொத்து வரியாக நிர்ணயித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இந்தநிலையில் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவுக்கு ரூ.3.83 கோடி மதிப்புக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதாகவும், செல்வ வரி கணக்கை ஜெயலலிதா முறையாக காண்பிக்கவில்லை என்றும் வருமான வரித்துறைக்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மறு மதிப்பீடு செய்து குறிப்பிட்ட தொகையை செல்வ வரியாக செலுத்த ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து, ஜெயலலிதா வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், வருமான வரித்துறை அதிகாரிகளின் திருத்திய மதிப்பீட்டை ரத்து செய்தது.
தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம், ‘ஜெயலலிதாவுக்கு சட்டப்படியான வாரிசுகள் யாரும் உள்ளனரா? அல்லது அவர் தனது சொத்துகள் தொடர்பாக உயில் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? என்பது குறித்து வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
பின்னர், விசாரணையை 26-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply