ஊழலை எதிர்த்து விரைவில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்
இலஞ்சம் ஊழல் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் உள்ள ஓட்டைகளை நிவர்த்தி செய்ய புதிய சட்டத்தை நாடாளுமன்றில் முன்வைக்க இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சரவைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் சரத் ஜயமன்னே நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முன்மொழியப்பட்ட சட்டம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் அது ஓகஸ்ட் 9 ஆம் திகதி சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு முன் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
மேலும், சொத்து அறிவிப்பு சட்டம், இலஞ்ச சட்டம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டங்களில் கடந்த 35 – 40 வருடங்களாக எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என தெரிவித்த அவர், இவை அனைத்தையும் சேர்த்து பொதுவான சட்டத்தை தற்போது தயாரித்துள்ளதாகவும் கூறினார்.
இவ்வாறு முன்மொழியப்பட்ட சட்டம் ஆணைக்குழுவை சுதந்திரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அதிகாரத்தை வழங்குதோடு, இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்ப்பதற்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரமும் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு திருத்தப்படாத தற்போதைய சட்டங்கள், மோசடி மற்றும் ஊழலுக்கு இடமளிக்கும் ஓட்டைகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
இதேவேளை இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாமல் செய்வோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திற்கு, இலஞ்சம் ஊழலை ஒழிக்க எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதற்கான தூரநோக்கு சிந்தனை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply