மிலேனியம் சவால் நிதிய உடன்பாடிற்கு ஜனாதிபதி மைத்திரிபால கால அவகாசம்
மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு தொடர்பாக ஆராய்வதற்கு காலஅவகாசம் தேவைப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தமையினால் குறித்த உடன்பாட்டுக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விவகாரம் கலந்துரையாடப்பட்டபோதே ஜனாதிபதியினால் காலஅவகாசம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாளை கலந்துரையாடவுள்ளதாகவும் இதன்பின்னர் தனது முடிவை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.
மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு தொடர்பான அமைச்சரவை பத்திரம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை சமர்ப்பித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சர், மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு ஒரு வளர்ச்சி உதவி ஒப்பந்தம் என்றும் அமெரிக்கா வழங்கிய 480 மில்லியன் அமெரிக்க டொலர், ஒரு பரிசுத்தொகை என்றும் அது கடன்தொகை இல்லை எனவும் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளை தொடருவதற்கு இந்தத் தொகை முக்கியமானது என்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இதேவேளை இந்த உடன்பாட்டின் சில உட்பிரிவுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கவலைகளைத் தொடர்ந்து, மைத்திரிபால சிறிசேன இந்த உடன்பாட்டுக்கு அனுமதியளிக்க மறுத்திருந்த நிலையில் உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் சாதகமாக பரிசீலிக்குமாறு அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கடந்தவாரம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்த உடன்பாடு வெளிப்படையானது என்றும், இலங்கை மக்களுக்கு செழிப்பை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் அந்த கடிதத்தில் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply