ஈரானில் கொரோனாவுக்கு மேலும் 43 பேர் பலி : உயிரிழப்பு 237 ஆனது
சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த வைரஸ் வேகமாக மற்ற மாகாணங்களுக்கும் பரவியது.இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.
சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.
இந்த மூன்று நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளாவிய அளவில் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக தற்போது உயர்ந்துள்ளது.
ஈரான் நாட்டில் மந்திரிகள் உள்பட சில முக்கிய பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில் பல அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அங்கு பொது மக்களிடையே கடும் பீதி நிலவி வருகிறது.
நேற்றைய நிலவரப்படி கொரோனா தாக்கத்தால் சீனாவில் மட்டும் சுமார் 3100 பேர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 233 உயிர்கள் பலியாகினர்.
இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 43 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும் கொரோனா பலி எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஈரான் அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 595 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாவும் ஈரானில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியின் ஆலோசகர் அலிரேஸா வஹாப்ஸாதே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply