எனக்கு கொரோனாவா? பிரேசில் அதிபர் பரபரப்பு பதில்

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. 

உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அந்நாடு அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் மைக் பென்சி மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனரோ பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டு அதிபரின் தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினும் பங்கேற்றார். 

அதிபரின் தகவல் தொடர்பு செயலாளர் என்பதால் அவர் ஜெய்ர் போல்சனரோவின் அருகில் அமர்ந்து டொனால்டு டிரம்பிற்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்துவந்தார்.

நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரேசில் அதிபருடன் நாடு திரும்பிய தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோவுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், தனக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக வெளியான தகவலை பிரேசில் அதிபர் முற்றிலும் மறுத்துள்ளார். 

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனக்கு கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், பரிசோதனையின் முடிவில் கொரோனா எதுவும் பரவவில்லை என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply