இந்தியாவில் முதல் முறையாக ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. கொரோனா வைரசுக்கு 7500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 147 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு பயண கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ராணுவ வீரர் ஒருவவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

34 வயதான அந்த வீரர் ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் உள்ள சுகாட் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உள்ளது. அவர் ஈரானில் இருந்து பிப்ரவரி 20ம்தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பினார். பிப்ரவரி 29-ம் தேதி முதல் லடாக்கில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

பிப்ரவரி 25ம் தேதி விடுப்பில் சென்ற ராணுவ வீரர், சொந்த ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தார். மார்ச் 2ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மார்ச் 7-ம் தேதி முதல் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது மார்ச் 16-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.என்.எம். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரது சகோதரி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply