சீனாவில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்ற முடிவு

அமெரிக்க நாட்டில் இருந்து கொண்டு சீன பத்திரிகையாளர்கள் பணிபுரிவதில் டிரம்ப் நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக சீன பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையை குறைத்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், அமெரிக்காவில் உள்ள சீன பத்திரிகை நிறுவனங்கள், அந்த நாட்டில் உள்ள தங்களது பணியாளர்கள், சொத்துக்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டிய நிலையையும் உருவாக்கியது. இது சீனாவுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ், தி வா‌ஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரிட் ஜர்னல் ஆகிய பத்திரிகைகளை சேர்ந்த பத்திரிகையாளர்களை வெளியேற்ற சீனா முடிவு எடுத்துள்ளது.இதற்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வேதனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ‘‘ சீனாவின் முடிவு துரதிர்‌‌ஷ்டவசமானது. இதை நாங்கள் பார்த்தோம். சீனா அதை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன்’’ என குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கருத்து தெரிவிக்கையில், ‘‘ சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்ற சீன கம்யூனிஸ்டு தலைவர்கள் முடிவு எடுத்து இருக்கிறார்கள். இது சீனாவைப்பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்காமல் மக்களை தவிக்க விடுகிற நிலையைத்தான் ஏற்படுத்தும். இதை சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என கூறியது.

அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி. மைக்கேல் மேக்கவுலும் சீனாவின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சீனாவில் பத்திரிகை சுதந்திரத்துக்கு விழுந்துள்ள அடி இது என அவர் கூறி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply