மாவிலாறில் தொடங்கி புதுமாத்தளத்தில் முடிந்த யுத்தம் போல் மீள்குடியேற்றமும் இந்தப் பகுதிகளில் விரைவில் இடம்பெற வேண்டும்

மாவில் ஆற்றில் ஆரம்பித்து புதுமாத்தளத்தில் யுத்தத்தை முடித்த ஜனாதிபதி தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்க வேண்டுமென பகிரங்கமாக கூறியுள்ள நிலையில் அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றமும் மாவிலாறிலிருந்து ஆரம்பித்து புதுமாத்தளனில் முடிக்க வேண்டும். இதன்மூலமே தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருமான ஆர். செல்வேந்திரன் தெரிவித்தார். மீள்குடியேற்றம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்களில் பலர் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதும் மூதூர் பகுதியில் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட சம்பூர் பிரதேசத்தில் நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் 1400 குடும்பங்களைச் சேர்ந்த 6500 பேர் இன்றும் மீள்குடியமர்த்தப்படவில்லை. இதனை ஜனாதிபதி துரிதப்படுத்த வேண்டும்.

இந்தக் குடும்பங்கள் கிளிவெட்டி, பட்டித்திடல் போன்ற 12 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடிப்படை வசதிகள் என்பன அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கடல் பாதுகாப்பு வலயத்தின் தடைகளை நீக்கி சுதந்திரமாக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

மீள்குடியேற்றப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்களுக்காக பல வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளும் திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான மின்சாரம், நன்னீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 6554 குடும்பங்களைச் சேர்ந்த 19,354 பேர் இதுவரை குடியமர்த்தப்பட்டுள்ளதுடன் 751 குடும்பங்களைச் சேர்ந்த 2536 பேர் இன்றும் குடியமர்த்தப்படவுள்ளனர். அவர்களை மிக விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply