13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதில் உறுதி
13வது திருத்தச் சட்டத்தை முழுயாக செயற்படுத்துவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருப்பதாகவும் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார். ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி அடைவதாகவும் அவர் கூறினார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய விசேட தூதுவர் நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் விசேட செய்தியாளர் மாநா டொன்றை நடத்தினார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, இலங்கைக்கான விஜயம் திருப்திகரமாக அமைந்தது.
எனது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசினேன். இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் குறித்து கவனிப்பதும் அரசியல் தீர்வு தொடர்பான முன்னேற்றம் பற்றி ஆராய்வதுமே எனது விஜயத்தின் நோக்கமாக இருந்தது. ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது அவர் அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் உறுதியாக இருப்பதை அறிந்தேன்.
இனங்களுக்கிடையில் ஒன்றுமையை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி பெரிதும் பாடுபட்டு வருகிறார். இலங்கையில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என இரு சாரர்கிடையாது என பாராளுமன்ற உரையில் அவர்குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தக் கருத்துக்களை பாராட்டுகிறேன்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். அரசியல் தீர்வு யோசனையொன்றை தயாரிக்க நியமிக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின் யோசனை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என ஜப்பான் அரசு ஆரம்ப முதல் கோரி வருகிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் திருப்தி அடைகிறோம்.
முகாம்களுக்கு விஜயம்
எனது விஜயத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டேன். அந்த மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து திருப்தி அடைகிறேன். மலசல கூட வசதிகள் தொடர்பில் குறைபாடுகள் காணப்படுகிறது.
கடந்த முறை விஜயம் செய்த போது இருந்ததைவிட முகாம்கள் பாரியளவு முன்னேற்றப்பட்டுள்ளன. புதிதாக முகாம்கள் அமைக்கப்பட்டுமுள்ளன.
இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
புலிகள் படையில் சேர்ந்த சிறுவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும் நிலையங்களுக்கும் சென்று பார்வையிட்டேன். அவர்களுக்கு சிறந்த வசதிகள் வழங்கப்படுகின்றன. தமது உறவினர்களிடம் திரும்பிச் சென்று சுமூகமாக வாழ்வு நடத்த அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஐ. நா. மனித உரிமை அமர்வு
இலங்கைக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைகள் அமர்வில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை முன்வைத்த யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. ஜப்பான் வாக்கெடுப்பின் போது நடுநிலைமை வகித்தது. ஜப்பான் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை. நாம் நடுநிலைமை வகித்தது குறித்து ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஜப்பானுக்கு நன்றி தெரிவித்தனர்.
சில நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டன. இலங்கை அந்த நாடுகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி அந்த நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும். இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது.
மீள்குடியேற்றம்
ஆறு மாத காலத்திற்குள் 80 வீதமான மக்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மீள்குடியேற்றத்திற்கு முன்னதாக நிலக்கண்ணிகளை முழுமையாக அகற்ற வேண்டிய பாரிய சவால் உள்ளது. இராணுவத்தினர் முழு முயற்சியுடன் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு ஜப்பான் தனது ஒத்துழைப்பை வழங்கும். மீள்குடியேற்றப் பணிகளுக்கும் ஜப்பான் எதிர்காலத்தில் உதவி வழங்கும்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் புலிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரித்ததால் இந்த உதவி கிடைக்காமல் போனது. ஜப்பான், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி என்பன இணைந்து இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியாக வழங்க உத்தேசித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply