பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தனுக்கு சிறைத்தண்டனை

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் ஏ.சி. சாந்தன் என்ற ழைக்கப்படும் அருணாச்சலம் கிருஸ்சாந்தகுமார், வயது 52, என்பவருக்கு ஆயுத தளபாடங்கள் பற்றிய ஆவணங்களை புலிகளுக்கு விநியோகம் செய்த குற்றத்துக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றம் இரண்டாண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவில் 2000ம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகள் அமைப்புக்கு உதவியதாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகளை ஸ்கொட்லண்ட் யாட் பொலிசார் சுமத்தியிருந்தனர்.

கனடாவில் புலிகளின் முகவர் அமைப்பாக இயங்கிய உலகத் தமிழர் முயக்கம் போல் ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிய பிரித்தானிய தமிழர் கழகத்தின் BTA (British Tamil Association ) தலைவரான சாந்தன் என்றழைக்கப்படும் ஏ. கிருஸ்சாந்தகுமார், மற்றும் அந்த அமைப்பின் நிதியாளர் கோல்டன் லம்பேர்ற் (இலங்கை தமிழர், வயது 30) என்கின்ற இருவரும் ஜூன், 2007இல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஆயுத தளபாடங்கள் பற்றிய ஆவணங்களை புலிகளுக்கு வழங்கியமை, புலிகளுக்காக பிரித்தானியாவில் நிதி வசூலித்தமை, இதன் மூலம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்தமை என மூன்று குற்றச்சாட்டுகள் ஏ. சி. சாந்தன் மீது பதிவு செய்யப்பட்டது.

கடந்த வருடம் ஏப்பிரலில் புலிகள் அமைப்புக்கு தற்கொலைத் தாக்குதல்களுக்கான தொழில்நுட்ப உதவி மற்றும் பணம் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரித்தானியாவில் வேல்ஸ், நீயூரவுண் பகுதியில் வசித்து வந்த முரளி தரன், 47, வித்தி தரன், 40, ஆகிய இருவரும், லண்டன் புறநகரான மிட்சம் பகுதியைச் சேர்ந்த முருகேசு ஜெகதீஸ்வரன், 33, என்பவருமாக மூன்று தமிழர்கள் பிரித்தானியாவின் ஸ்கொட்லண்ட் யார்ட் சர்வதேச பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply