மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது : சீமான்
தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மே 7 ஆம் திகதி முதல் தமிழகத்தில் மதுபானக்கடைகள் செயற்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுபானக் கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுபானக் கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது என்றும் இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும் என கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது. தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply