பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு நன்மை என்றால் வரவேற்கத்தக்கது : முன்னாள் ரெலோ ஸ்ரீகாந்தா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நன்மைகளாவது கிடைக்குமானால் அது வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே என்.சிறிக்காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் கூடியுள்ள கூட்டத்திற்கு போவதோ விடுவதோ என்பது சம்பந்தப்பட்ட கட்சிகளை பொறுத்தது. அந்த வகையிலே எங்களுடைய கட்சியும் அங்கம் வகிக்கின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கூட்டத்தை புறக்கணித்துள்ளார் என்பதும் இந்த முடிவு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நிலைப்பாடு என்பதும் நான் சொல்ல வேண்டிய விடயங்களாகும்.
ஆனால் அதேநேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதையிட்டு சாதகமாகவோ பாதகமாகவோ நான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அது அவர்களுக்குரிய விவகாரம் அவர்களைப் பொறுத்தது. ஆனால் அவர்கள் கலந்து கொள்வதன் ஊடாக ஏதாவது ஒன்று அல்லது இரண்டு நன்மைகளாவது அவர்களால் மக்களுக்கு கிடைக்குமென்றால் அது வரவேற்கத்தக்க விடயம். நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் கொள்கையளவிலே நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டுவதற்குரிய காரணங்கள் வலுவாக இருக்கின்றன. நாட்டில் நெருக்கடி நிலைமை ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. கொரோனா தொற்று நோயினுடைய பரவல் காரனமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஸ்தம்பித்திருக்கின்றது.
நாடாளுமன்றத் தேர்தல் பற்றி இப்போது சிந்திக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே பாராளுமன்றம் கூட்ட படவேண்டிய ஒரு நடைமுறை தேவை, அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்ற வகையிலே எதிர்க்கட்சியினை சேர்ந்த சகலரும், நாங்கள் சார்ந்த கட்சி உட்பட வேண்டுகோளை விடுத்திருந்தும் அவை ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்தப் பின்னணியில்தான் பிரதமருடைய கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதில்லை என கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகள் பலவும் தீர்மானித்துள்ள நிலையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறுவிதமான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது.
ஆனால் அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை அது அவர்களைப் பொறுத்த விவகாரம், அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அரசியல் சர்ச்சைகளுக்கு இதுவல்ல நேரம், இது ஒரு நெருக்கடியான நிலைமை அனைவரும் பொறுப்புடன் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலகட்டம்.
குறுகிய அரசியல் வேறுபாட்டை பின்தள்ளி மக்களுடைய நலன்களை, இன மத மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் சகலரும் மக்களுடைய நலன்களை முன்னிறுத்தி செயற்படவேண்டிய நேரம் இது” என சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply