கொரோனாவின் கோரத்தாண்டவம் : இங்கிலாந்தில் பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது
வளரும் நாடுகள் மட்டுமின்றி வல்லரசு நாடுகளையும் கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் உலக அளவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த ஆட்கொல்லிக்கு எதிராக தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டு பிடிக்கப்படாததால், கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் அனைத்து தரப்பினரையும் பாகுபாடு பார்க்காமல் தாக்கி வருகிறது. இதில் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கணிசமாக ஏற்படுகிறது.
அங்கு மேலும் 315 பேர் கொரோனாவுக்கு மடிந்துள்ளதை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 446 ஆக அதிகரித்து உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகள், பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்ட சாவுகள் மற்றும் பரவலாக நிகழ்ந்துள்ள மரணங்களின் எண்ணிக்கையை உள்ளடக்கியது ஆகும்.
இதைப்போல வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கையும் 1 லட்சத்து 86 ஆயிரத்தை கடந்து விட்டது. நேற்று முன்தினம் காலை வரை 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதைப்போல வைரசுக்கு எதிரான போரில் முன்னணியில் இருக்கும் மருத்துவ, தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கும் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக கேபினட் அலுவலக மந்திரி மைக்கேல் கோவ் கூறினார்.
நாட்டின் பொருளாதார மேம்பாடு, குழந்தைகளை பள்ளிகளுக்கு திரும்ப செய்வது, பயணம் மற்றும் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வது உள்ளிட்ட விரிவான நடவடிக்கைகளை எப்படி தொடங்குவது? என்பது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே உலக அளவில் கொரோனா வைரசின் பிடியில் சிக்கியோரின் எண்ணிக்கை 36 லட்சத்தை நெருங்கி விட்டது. இதைப்போல சாவு எண்ணிக்கையும் 2 லட்சத்து 49 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிப்பிலும் 11 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அமெரிக்கர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply