அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கி இந்திய டாக்டர்களான தந்தையும், மகளும் பலி
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நாட்டில் கொலைகார கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 76 ஆயிரத்தை கடந்தது.
நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருவதால் அவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட போதிய இடம் இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டு, உடல்கள் பல நாட்களாக குளிரூட்டப்பட்ட லாரிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் பதைபதைக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த டாக்டர்களான ஒரு தந்தையும், மகளும் கொரோனா வைரசுக்கு அங்கு களப்பலியாகி இருக்கிறார்கள் என்ற தகவல் நெஞ்சை பிசைவதாக அமைந்துள்ளது. இதுபற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் கிளன் ரிட்ஜ் என்ற இடத்தில் டாக்டராக இருந்து வந்தவர், சத்யேந்தர் தேவ் கன்னா (வயது 78). இவர் டெல்லியில் 1964-ம் ஆண்டு, மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். பின்னர் அவர் அமெரிக்காவில் குடியேறினார். இவர் அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை துறைகளின் தலைவராக பணியாற்றி உள்ளார்.
இவரது மகள் டாக்டர் பிரியா கன்னா (43). இவர் உள்மருத்துவம் மற்றும் சிறுநீரக மருத்துவம் ஆகிய இரண்டிலும் நிபுணர் ஆவார்.
ஆர்.டபிள்யு.ஜே. பர்னபாஸ் சுகாதார அமைப்பின் (யூனியன் ஆஸ்பத்திரி) உறைவிட தலைமை மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இவர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தாக்கி, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
இதுகுறித்து நியூஜெர்சி மாகாண கவர்னர் பில் மர்பி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
டாக்டர் சத்யேந்தர் தேவ் கன்னா மற்றும் டாக்டர் பிரியா கன்னா ஆகியோர் தந்தை, மகள் ஆவர். அவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். இந்த குடும்பம், உடல் நலம் மற்றும் மருத்துவத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குடும்பம். இவர்களது மறைவுக்கு வார்த்தைகளால் இரங்கலை வெளிப்படுத்தி விட முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் நிருபர்களிடமும் கவர்னர் பில் மர்பி, இவர்களது மறைவு குறித்து வேதனையுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
டாக்டர் சத்யேந்தர் தேவ் கன்னாவும் சரி, அவரது மகள் பிரியா கன்னாவும் சரி, இருவருமே தங்கள் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்த நிலையில், அவர்களை கொரோனா வைரசால் நாம் இழந்து நிற்கிறோம். அவர்களது மறைவு எனக்கு மிகவும் கடிமான ஒன்று.
சத்யேந்தர் தேவ் கன்னா, எந்த கிளாரா மாஸ் மெடிக்கல் சென்டரில் 35 ஆண்டுகள் பணியாற்றினாரோ, அங்குதான் மரணம் அடைந்துள்ளார். இந்த மாகாணத்தில் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மருத்துவத்தில் அவர் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வந்தார். அவர் ஒரு மென்மையானவராக, அக்கறையுள்ள டாக்டராக சக டாக்டர்களால் நினைவுகூரப்படுகிறார். அவரை நினைவில் கொள்வதற்கு மிகவும் பொருத்தமான ஒரு வழி இருக்கக்கூடும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வகையில் என்னால் பந்தயம் கூட கட்ட முடியும்.
அவருக்கு சைக்கிள் ஓட்டுவதில் அலாதியான ஆர்வம் இருந்தது. ஆஸ்பத்திரியின் சலசலப்பில் இருந்தும், ஜெர்சி கடற்கரையில் சைக்கிள் ஓட்டியதில் இருந்தும் அவர் அமைதியை கண்டுள்ளார்.
இவ்வாறு அவர் உருக்கமுடன் கூறினார்.
டாக்டர் சத்யேந்தர் தேவ் கன்னாவின் மகள் டாக்டர் பிரியா கன்னா, நியூஜெர்சி மாகாணத்தில் படித்து டாக்டர் ஆனவர். தனது தந்தையைப் போலவே அவரும் கிளாரா மாஸ் மெடிக்கல் சென்டரில்தான் பணியாற்றி வந்தார். அவரும் தான் பணியாற்றிய ஆஸ்பத்திரியிலேயே உயிரிழந்துள்ளார்.
இவர் அடுத்த தலைமுறை டாக்டர்களுக்காக எஸ்செக்ஸ் கவுண்டியில் 2 டயாலிசிஸ் மையங்களில் வகுப்பு எடுத்தவர் என்று கவர்னர் பில் மர்பி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் பிரியா கன்னாவின் நினைவுகள் குறித்து அவர் பகிர்ந்து கொள்ளும்போது, “டாக்டர் பிரியா அக்கறையுள்ள, தன்னலமற்றவராக நினைவுகூரப்படுவார். அவர் எப்போதும் மற்றவர்களுக்கு முதல் இடம் கொடுக்கும் நபராக திகழ்ந்தார். ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தபோதும், தனது தந்தையையும், தாயையும், குடும்பத்தினரையும் தொடர்ந்து பரிசோதித்து வந்தார். இது ஒரு அற்புதமான குடும்பம். மருத்துவத்துக்காக தன்னையே அர்ப்பணித்த குடும்பம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
டாக்டர் சத்யேந்தர் தேவ் கன்னாவின் மனைவி கோம்லிஷ் கன்னா குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஆவார். அவரை கவர்னர் பில் மர்பி சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம், “இது நம்ப முடியாதது. எங்கள் வார்த்தைகளால் எங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி விட முடியாது. கன்னா குடும்பத்தினரின் வேதனையை வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட முடியாது என்று நான் நம்புகிறேன். எங்கள் முழு மாகாணமும் அவர்களது மறைவுக்காக துக்கப்படுகிறது, இது ஒரு சிறிய ஆறுதல்தான். நாங்கள் இழந்த ஒவ்வொருவருக்காகவும் துக்கப்படுகிறோம். டாக்டர் சத்யேந்தர் தேவ் கன்னா, டாக்டர் பிரியா நினைவாக எங்களால் முடிந்த அளவுக்கு பல உயிர்களை காப்பாற்ற முயற்சிக்கிறோம்” என குறிப்பிட்டார்.
டாக்டர் சத்யேந்தர் தேவ் கன்னா, பிரியா கன்னா மறைவு, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply