2 நாளில் ரூ.294 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை : மதுரை முதலிடம்
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பல்வேறு மதுக்கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மே 7ம் தேதி ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் திறக்கப்பட்டன. 43 நாட்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டதால் மது விற்பனை அமோகமாக இருந்தது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் முதல் நாளில் ரூ.172 கோடிக்கு மது விற்பனையானது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று 122 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றும் மதுரையில் தான் அதிகபட்ச விற்பனை இருந்தது. மதுரையில் 32.45 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியிருந்தது.
தமிழகத்தில் 2 நாட்களில் மொத்தம் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருக்கிறது.
இதற்கிடையே டாஸ்மாக் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும், ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply