அரச, தனியார் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அரசாங்கம் விசேட அறிவுறுத்தல்
ஒருமாத காலத்திற்கு மேல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கொழும்பு, கம்பஹ, களுத்துறை மற்றும் புத்தளம் அடங்கலாக நாடு முழுவதும் நாளை முதல் பகுதியளவில் நிர்வாக செயற்பாடுகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் நாளை முதல் பகுதியளவில் ஆரம்பமாகும். அதேவேளை, பொதுப் போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக செயற்பாடுகள் பகுதியளவில் ஆரம்பிக்கப்பட்டாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுமெனவும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துகள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பிற்பகுதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அநேக மாவட்டங்களில் இடைக்கிடையே ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ள கொழும்பு, கம்பஹ, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஒருமாத காலத்திற்கும் மேலாக தொடர்ந்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே பகுதியளவில் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டதோடு போக்குவரத்துகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலே கொழும்பு, கம்பஹ, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் பகுதியளவில் நிர்வாக செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதோடு மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களுக்கே கடமைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் அலுவலகங்கள் தனிப்பட்ட போக்குவரத்து மூலம் ஊழியர்களை அழைத்துவரவுள்ள அதேவேளை முன் அனுமதிபெற்ற அரச ஊழியர்களுக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகங்களுக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
சகல மாவட்டங்களிலும் நாளை (11) காலை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதோடு புதிய ஊரடங்கு விதிகள் தொடர்பாக இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன. 04 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனை மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஏனைய மாவட்டங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமென அறியவருகிறது.
நிர்வாக செயற்பாடுகள் பகுதியளவில் ஆரம்பிக்கப்படுவதற்காக ரயில் நிலையங்கள், பஸ் தரிப்பிடங்கள், அலுவலகங்கள் என்பவற்றை கிருமி நாசினி விசிறி சுத்தம் செய்யும் பணிகள் கடந்த இரு தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அலுவலகங்களுக்கு வருவோர் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி நடக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை அதிவேக வீதிகள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக நாளை 11 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன.
தெற்கு அதிவேக வீதியின் வெளியேறும் பகுதி மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்துள்ளார்.
அதிவேக வீதிகள் திறக்கப்பட்ட தினத்தில் வாகன நெரிசல் ஏற்படலாமென எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
கட்டணங்களை அறவிடும் பிரிவுகள் உள்ளிட்டவைகளில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு முதல்நாளில் கடமைக்கு சமுகமளிப்பதில் சிக்கல் தோன்றியுள்ளதால், சில சந்தர்ப்பங்களில் 03 அதிவேக நெடுஞ் சாலைகளும் திறக்கப்படுவதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் நாளை மறுதினம் 12 ஆம் திகதி முதல் சேவைகளை வழமைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாளை திங்கட்கிழமை (11) முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மேலும் 1,500 பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
ஊடரங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்குள் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக தெரிவித்துள்ளார். அலுவலக நேரங்களை அடிப்படையாகக் கொண்டு பஸ்கள் இயங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேவையேற்படும் பட்சத்தில் கட்டணங்களை அறவிட்டு, அலுவலகங்களுக்கு பிரத்தியேக சேவையை வழங்குவதற்கும் தயாராகவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பயணிப்பதற்கு மாத்திரமே அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தவிர, வைத்தியசாலைகளில் சுகாதார சேவை ஊழியர்களுக்கான போக்குவரத்திற்காக நாடு முழுவதும் 426 பஸ்களை ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை மேலும் கூறியுள்ளது.
இது தவிர குறிப்பிட்டளவு ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்பட இருப்பதோடு அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திங்கட்கிழமை (11) முதல் குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் மக்கள் பின்பற்ற வேண்டுமென குடிவரவு, குடியல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தருவோர் தமக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக அலுவலக நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 070 7101060, 070 7101070 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு மக்கள் தமக்கான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர,கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (11) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
முற்பகல் 11 மணி முதல் பகல் 1 மணி வரை கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
இதேவேளை,ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் கடமைக்கு திரும்பும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதற்கிணங்க நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலுள்ள நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை அழைத்துக் கொள்வது அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களது பொறுப்பாகுமென்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதுடன் கொழும்பிலுள்ள நிறுவனங்களுக்கு கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் தமது ஊழியர்களை அழைப்பது சிறந்ததென அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கடமைக்கு வருகின்ற ஊழியர்கள் இலகுவான உடைகளை அணிந்து வருமாறும் அவர்கள் தமது கடமைகளை நிறைவுசெய்த பின்னர் நிறுவனத் தலைவரின் இணக்கப்பாட்டுடன் நேர காலத்திற்கு வீட்டுக்குச் செல்வதற்கு முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply