ரெலோ ( சிறீ ) உறுப்பினர்கள் மீதான படுகொலை ஐனநாயக விரோதிகளின் திட்டமிட்ட செயலாகும்!
எமது சகோதர அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கமாகிய ரெலோ ( சிறீ )உறுப்பினர்கள் மீதான படுகொலை என்பது எமது மக்களுக்களுக்கான ஐனநாயக வழிமுறை செயற்பாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகவே கருதப்படவேண்டும். மனித நேய விழுமியங்களுக்கு மதிப்பளிக்க மறுக்கும் ஐனநாயக விரோதச் செயலாகவே இந்த படுகொலை சம்பவத்தை நாம் கருதுகின்றோம்.
எமது மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய தியாகங்களை புரிந்த விடுதலை அமைப்புக்களில் ரெலோ அமைப்பும் பிரதான பாத்திரத்தை வகித்திருந்த ஒன்றாகும்.
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பு பாசிசப் புலிகளால் தடை செய்யப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் பல நூறு போராளிகள் தெருத்தெருவாக சுட்டுக் கொல்லப்பட்டு அதன் தலைவரான சிறீ சபாராத்தினம் அவர்களும் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் ரேலோ அமைப்பு எமது மக்கள் மத்தியில் இருந்து அகன்று விடும் என்றே தமிழின துரோகிகளான புலித்தலைமை எதிர்பார்த்திருந்தது.
இந்நிலையில் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் வழித்தோன்றல்கள் எனதங்களை அடையாளப்புடுத்தியிருந்த சிலர் தமது தலைவரையே கொன்றொழித்த புலித்தலைமையின் பக்கமே சார்ந்திருந்து வருகின்றனர்.
ஆனாலும், அராஐகங்களுக்கு அடிபணிய மறுத்து எமது மக்களுக்கானஅரசியலுரிமைக்காக ஐனநாயக வழிமுறை நின்று தலைவர் சிறீ சபாரத்தினம்அவர்களது கனவுகளை தமது தோள்களில் சுமந்து வருபவர்கள் ரெலோ ( சிறீ ) அமைப்பினர்.
இவர்களது மீள் வருகையை ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற பன்முகச்சிந்தனையோடு உண்மையான ஐனநாயக சக்திகள் மட்டும் ஆதரித்து வருகின்ற நிலையில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
ரெலோ அமைப்பிற்கு எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் ஒரு பிரதான பாத்திரம் உண்டு. அந்த வரலாற்றை தமது தலைவரை இழந்த நிலையில் அவரது வழித்தோன்றல்கள் தமது கையில் எடுத்து எமது மக்களுக்கான ஐனநாயக வழிமுறைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் ஈவிரக்கமற்ற இந்த படுகொலை திட்டமிட்ட வகையில் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது.
இது போன்ற மக்கள் விரோத சக்திகளின் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! தனி மனித படுகொலைகளால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கண்டு விட முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்!
இந்த படுகொலையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்! அதே வேளையில்தமது உறுப்பினர்களை இழந்து தவிக்கும் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் கனவுகளை வலுப்படுத்தும் ரெலோ அமைப்பினர்களுக்கும், படுகொலை செய்யப்பட்ட ரெலோ உறுப்பினர்களின் குடும்பத்தவர்கள், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பு உறுப்பினர்களான தோழர் வசந், மற்றும் தோழர் பரா ஆகியோருக்கு நாம் வீர மரியாதை செலுத்துகின்றோம்.!
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply