சோமாலிய கடற்கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட 17 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்
ஆப்பிரிக்காவில் சோமாலியாவில் உள்ள கடற்கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் 17 பேர் மீட்கப்பட்டனர். கடற்கொள்ளைக்காரர்களுடன் துப்பாக்கிச்சண்டை நடத்தி தான் அவர்கள் மீட்கப்பட்டனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவில் கடற்கொள்ளைக்காரர்கள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. அந்த நாட்டில் 1991-ம் ஆண்டு முதல் செயல்படும் அரசாங்கம் கிடையாது. உள்நாட்டு சண்டையால் அந்த நாடு வறுமையின் பிடியில் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் கப்பல்களை கொள்ளையடித்து வாழ்க்கை நடத்துவது வளமான தொழில் ஆக சோமாலியா நாட்டினருக்கு மாறி உள்ளது. கப்பல்களை கடத்திச் சென்று பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டில் மட்டும் 30 கப்பல்கள் கடத்தப்பட்டு உள்ளன.
ஆங்காங்கில் பதிவு செய்யப்பட்ட எம்.வி.ஸ்டால்ட் வாலர் என்னும் கப்பலை மும்பை நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறது. இந்த கப்பலில் 17 சிப்பந்திகள் இருந்தனர். இந்த கப்பல் கடந்த ஆகஸ்டு மாதம் சோமாலியா அருகே சென்றபோது கடற்கொள்ளைக்காரர்கள் கப்பலை கடத்திச்சென்றனர்.
கப்பலை விடுவிக்கவேண்டுமானால் பல கோடி ரூபாய் வேண்டும் என்று மிரட்டினார்கள். 2 மாதமாக இந்த கப்பலை மீட்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்தநிலையில் சிப்பந்திகள் அனைவரையும் கொல்லப்போவதாக கொள்ளையர்கள் மிரட்டி வந்தனர்.
இதற்கிடையே நேற்று சோமாலியா ஆயுதப்படையினர் அந்த கப்பலுக்குள் அதிரடியாக புகுந்து கடற்கொள்ளையர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் கொள்ளைக்காரர்கள் கப்பலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்கள். அவர்களில் 4 பேரை ராணுவம் பிடித்தது. 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
அதன்பிறகு இந்திய கப்பல் சிப்பந்திகள் 17 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தியர்களுக்கு இந்த சண்டையில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திResponses are currently closed, but you can trackback from your own site.