180 நாட்கள் வேலைத்திட்டத்துக்குத் முழு அளவில் தயாராகும் அரசாங்கம்

எதிர்வரும் மாதங்களில் வடக்கில் முன்னெடுக்கப்படவிருக்கும் 180 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு அரசாங்க அமைச்சர்கள் முழு அளவில் தயாராகிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டத்துக்கு உதவிவழங்கும் நாடுகளிடமிருந்து நிதியுதவி கோரும் நடவடிக்கைகளில் பல்வேறு அமைச்சுக்கள் இறங்கியிருப்பதாகவும், உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதிலேயே கூடுதலான அமைச்சுக்கள் கவனம் செலுத்தியிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த 180 நாட்கள் வேலைத் திட்டத்தில் குறைந்தளவு சேவை ரீதியான அபிவிருத்திகளை வழங்குவதற்கே அமைச்சுக்கள் கவனம் செலுத்தியிருப்பதுடன், ஏனைய அபிவிருத்தி மற்றும் முதலீட்டுத் திட்டங்களை எதிர்வரும் 2-3 வருடங்களுக்குள் பூர்த்திசெய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் கல்வியமைச்சு முக்கிய பங்காற்றிவருவதுடன், மாணவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான நிரந்தரப் பாடசாலைகளை அமைத்துக்கொடுப்பதில் அக்கறை செலுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிளிநொச்சியில் 96 பாடசாலைகளும், முல்லைத்தீவில் 103 பாடசாலைகளும் புனரமைக்கப்படவிருப்பதுடன், இராணுவத்தினரின் அனுமதி கிடைத்த பின்னர் இந்த அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம், முதற்கட்டமாக 500 புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவிருப்பதா வீடமைப்பு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், மன்னாரில் 1000 வீடுகளும், வவுனியாவில் 175 வீடுகளும், யாழ்ப்பாணத்தில் 175 வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்படவிருப்பதாக அந்த அமைச்சின் செயலாளர் குணதிலக தெரிவித்தார்.

இந்த 180 நாட்கள் வேலைத்திட்டத்தில் தமது அமைச்சுக்கான செலவு 45 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேபோல, சுகாதார அமைச்சு, மீன்பிடித்துறை அமைச்சு, விவசாயத்துறை அமைச்சுப் போன்ற அமைச்சுக்களும் தமக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply