இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது இயல்பானது தான் : உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பெருகிக்கொண்டே போகிறது.அதிலும் கடந்த சில நாட்களாக 14 ஆயிரம், 15 ஆயிரம் என்கிற அளவுக்கு தினமும் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கையும் 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவுக்கு சோதனையான காலமாக இது பார்க்கப்படுகிறது. ஆனால் இது இயல்பான ஒன்றுதான் என்பதாக உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.

இதையொட்டி நேற்று முன்தினம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால திட்ட இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் இப்போது கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து இருக்கின்றன. ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதை ஒரு சோதனையான நிகழ்வாக கருத வேண்டாம். கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. ஏனென்றால், ஏராளமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் தொற்றுநோய் பரவல் அதிகரிப்பது இயல்பானதுதான்.

அந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது, உலகளவில் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்புக்கு ஏராளமான நாடுகள் பங்களிப்பு செய்கின்றன. அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்படுவதால், தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. பல நாடுகளிலும் தொற்று பாதித்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவதும் கூடிக்கொண்டேதான் போகிறது.

இப்போது கொரோனா வைரஸ், உலகளவில் தன்னை நன்றாக நிலை நிறுத்திக்கொண்டு விட்டது. தற்போது அது பல நாடுகளிலும் உச்சத்தில் இருக்கிறது அல்லது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் தொற்றுநோய் தற்போது உச்சத்தில் உள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளில் உச்சத்தை நோக்கி நகர்கிறது. அதன் விளைவுதான் தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆகும்.

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, தெற்காசியா ஆகியவை தற்போது உலகளாவிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பங்களிப்பை செய்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளும்கூட இப்போது ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக்கு தங்கள் பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றன. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை என்பது நிச்சயமாக வேகம் எடுக்கிற நிலைதான் இப்போது உள்ளது. இதுதான் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலும் சரி, இறப்பிலும் சரி சில நாடுகள் அதிரடியாக ஏற்றம் கண்டு வருகின்றன. சில நாடுகள் தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளன. ஆனால் அந்த நாடுகளும் பொருளாதார, சமூக நடவடிக்கைகளை திறந்து விட்டுள்ளதால் திரும்ப தொற்று பரவல் அதிகரிப்பதை காண்கின்றன” என்று குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply