இந்தியாவில் காசநோய் உயிரிழப்புகள் 95 ஆயிரம் அதிகரிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்தில் உள்ள லங்காஸ்டர் பல்கலைக்கழகமும், லண்டன் மருத்துவ கல்லூரியும் இணைந்து கொரோனா வைரஸ், காசநோயில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தின. அதன் ஆய்வு முடிவுகள், ஐரோப்பிய பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தலைமை ஆராய்ச்சியாளரான லண்டன் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் பின் மெக்குவாய்ட் கூறியிருப்பதாவது:-
உலக காசநோய் பாதிப்பில், சீனா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 40 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. காசநோயும், கொரோனா வைரசை போலவே, நோயாளியின் வாய், மூக்கில் இருந்து வெளியேறும் நீர்த்திவலைகள் படுவதால் மற்றவர்களுக்கு பரவுகிறது.
ஆனால், தற்போது, உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனால், காசநோய்க்கான பரிசோதனையும், சிகிச்சையும் குறைந்துவிட்டது. குறைந்த, நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் காசநோய் சிகிச்சை கிடைப்பது இல்லை. இந்த சுகாதார சேவை குறைபாடு காரணமாகவும், பரிசோதனை மற்றும் சிகிச்சையில் ஏற்படும் தாமதம் காரணமாகவும் காசநோய் உயிரிழப்புகள் அதிகரிக்கும்.
சீனா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் காசநோய் தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படும். இது, 2 லட்சமாக கூட உயரும்.
இந்தியாவில் கூடுதலாக 95 ஆயிரம் பேரும், சீனாவில் கூடுதலாக 6 ஆயிரம் பேரும், தென்ஆப்பிரிக்காவில் கூடுதலாக 13 ஆயிரம் பேரும் காசநோய்க்கு பலியாவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply