தந்தை மகன் மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்க முடிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பூங்கா அமையும் இடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது ‘‘சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்திருக்கும்போது உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (55). இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் ஊரடங்கு விதிகளை மீறி கடையை நடத்தியதாக போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின், அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

போலீசார் தாக்கியதில்தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். எஸ்.ஐ..க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply