டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தது ஈரான்

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவானது.

இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் வலுத்தது.

இந்த நிலையில் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட 30க்கும் மேற்பட்டோர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டை ஈரான் அரசு பதிவு செய்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.

அதுமட்டும் இன்றி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, டிரம்ப் உள்ளிட்டோர் தப்பித்து செல்லாமல் இருக்க, ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இன்டர்போலிடம் ஈரான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

டிரம்ப்பை தவிர, வேறு யாருக்கெல்லாம் பிடிவாரண்டு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஈரான் அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதேசமயம் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிந்த பிறகும் இந்த வழக்கில் அவர் மீதான விசாரணை தொடரும் என்பதை ஈரான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இதனிடையே ஈரான் அரசின் கோரிக்கைகள் குறித்து இன்டர்போல் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் டிரம்புக்கு எதிராக ஈரான் பிடிவாரண்டு பிறப்பித்திருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply