யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவோம்: வீ ஆனந்தசங்கரி
யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் தாங்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக த.வி. கூ. தலைவர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்தால் அவர்களுக்கும் இடமளிக்கப்படும் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக்கூட்டணி, பத்மநாபா ஈபிஆர்எல்எப், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுச்சின்னமாகிய குத்துவிளக்கு சின்னத்தில் வவுனியாவில் போட்டியிடுவது என்று முன்னர் தீர்மானித்திருந்தன. எனினும் தற்போது, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தமது சின்னமாகிய நங்கூரம் சின்னத்திலேயே போட்டியிடப்போவதாகத் தெரிவித்திருக்கிறது. இது செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதனால், அதற்கு தம்மால் இணங்க முடியாது என்று ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
முன்னர் இணங்கியபடி, குத்து விளக்கு சின்னத்தில் வவுனியாவிலும், உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணத்திலும் கூட்டாகப் போட்டியிடத் தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு மற்ற கட்சிகள் தயாரில்லாவிட்டால் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் தாங்கள் தனித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply