பொலிஸாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி சற்று முன்னர் யாழில் அரச உத்தியோகத்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலக உதவியாளர் மீது இனம் தெரியாதோர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வாள்வெட்டுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் கையில் வாள் வெட்டு காயத்திற்கு இலக்கான உத்தியோகஸ்தர் பாதுகாப்பு தேடி மாவட்ட செயலகத்தினுள் ஓடியுள்ளார்.

இருப்பினும் தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் விடாது துரத்திச்சென்று மாவட்ட செயலகத்தினுள்ளும் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அலுவலரின் கையில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அங்கு நின்ற மக்களால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது அலுவலகரின் மோட்டார் சைக்கிலும் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில், தெரிவத்தாட்சி அலுவலகமும் செயற்பட்டு வருகின்றது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து மாவட்ட செயலகம் தெரிவத்தாட்சி அலுவலகம் என்ற ரீதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியிலும் தாக்குதல்தாரிகள் அரச உத்தியோகத்தர் ஒருவரை அலுவலக வளாகத்திற்குள்ளும் சென்று தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போது யாழ் பொலிஸ் நிலைய பொலிஸார் செயலகத்தின் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தாக்குதல்தாரிகளை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply