கொரோனா தொற்று, காற்றின் வழியே பரவும் : ஆதாரங்களை ஒப்புக்கொண்ட உலக அமைப்பு
கொரோனா வைரஸ் தொற்று, புற உலகில் ஒருவரின் தும்மல், இருமல் மூலம் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது. அத்துடன், தொற்று பாதித்த ஒருவருடன் கைகுலுக்குகிறபோது, எதிர் தரப்பினர் கைக்கு வைரஸ் தாவி, அவர் தனது கையை முகத்திற்கு கொண்டு போகிறபோது அது வாய், மூக்கின் வழியே நுரையீரலுக்கு பரவிவிடுகிறது. இது உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், காற்றின்வழியே கொரோனா தொற்று பரவும் என்ற கருத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதன்முறையாக எழுந்தது. ஆனால் இதை அப்போது ஒப்புக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் தயங்கியது.
இந்த நிலையில் 239 விஞ்ஞானிகள் காற்றின் வழியே கொரோனா பரவும் என கூறியதை மேற்கோள்காட்டி அமெரிக்காவில் ‘நியுயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்திடம் நேற்று முன்தினம் நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர்.
அப்போது உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் டாக்டர் பெனிடெட்டா அலெக்ரான்ஸி இதை ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “காற்றின்வழியே கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பது தொடர்பாக வெளியாகி உள்ள புதிய ஆதாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த ஆதாரத்தை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தொற்றுபரவலில் இதன் தாக்கங்கள் குறித்தும், எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என கூறினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் மற்றொரு நிபுணரான டாக்டர் மரியா வான்கெர்கோவும் இதில் கருத்து தெரிவித்தார்.
அவர், “கொரோனா வைரஸ் தொற்று காற்று வழியாகவும், ஏரோசல் வழியாகவும் (தூசுப்படலம்) பரவும் சாத்தியங்கள் பற்றி பேசி வருகிறோம். நீர்த்திவலைகள் மூலமாக பரவுவது பற்றியும் பேசுகிறோம். இது தொடர்பாகவும், நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பது தொடர்பாகவும் அறிவியல் ரீதியில் ஒரு விளக்கத்தை நாங்கள் தயாரித்து வருகிறோம். பல வாரங்களாக இது தொடர்பாக நாங்கள் வேலை செய்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு இந்த வார இறுதியில் சீனா செல்கிறது, இதற்கான ஏற்பாடுகள் முடிந்து இருக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply