ஜனநாயக த. தே. கூட்டணி பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதில் இழுபறி
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிடும் முயற்சி தோல்வி கண்டுள்ளது. இதனால் கூட்டணி பிளவுபட்டுள்ளது. சின்னம் தொடர்பான இழுபறியினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன உடன்படவில்லை.
யாழ் மாநகர சபையில் உதய சூரியன் சின்னத்தில் வவுனியாவில் புளொட்டின் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடலாம் என்பது அதன் தலைவர் சித்தார்த்தனின் யோசனை.
ஆனால் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும். இல்லையேல் தனி வழி போகிறேன் என்று ஆனந்தசங்கரி தெரிவித்து விட்டார். இவ்வாறு ஏற்பட்ட இழுபறிக்குத் தீர்வு காண முடியாமல், புளொட் அமைப்பும் பத்மநாபா ஈபிஆர்எல்எப்பும் இணைந்து களமிறங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வவுனியாவில் நங்கூரத்திலும், யாழ்ப்பாணத்தில் பத்மநாபா ஈபிஆர்எல்எப்பின் மெழுகுவர்த்தி சின்னத்திலும் களமிறங்குவதென புளொட் தலைவர் சித்தார்த்தனும், பத்மநாபா ஈபிஆர்எல்எப் தலைவர் ரீ. ஸ்ரீதரனும் இணக்கம் கண்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேட்பாளர்களைத் திரட்டி வருவதாக ஆனந்தசங்கரி தெரிவித்தார். “உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் தயாரென்றதால் தான் அவர்களை (சித்தார்த்தனையும், ஸ்ரீதரனையும்) கூட்டணியில் சேர்த்துக் கொண்டேன். அந்த உடன்படிக்கையை மீறி கூட்டணியை உடைத்துவிட்டார்கள்.” என்று தெரிவித்தார் ஆனந்தசங்கரி.
ஆனால், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை உருவாக்கியபோது அப்படி ஓர் உடன்பாடு இருக்கவில்லை என்று சித்தார்த்தனும், ஸ்ரீதரனும் தினகரனுக்குத் தெரிவித்தனர்.
“உதய சூரியன் சின்னம் கிடைத்துவிட்டால் போட்டியிடலாம் தானே தம்பி? என்று சங்கரி கேட்டார். ஓம் அன்னை நல்லதுதானே என்று நான் சொன்னேன். இதில் நிபந்தனையோ, உடன்பாடோ கிடையாது என்று புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.
“நகரில் குப்பை கொட்டும் ஒரு சிறிய பணியைச் செய்வதற்காக, நான்கு வருடக் கூட்டணியை முறித்துக் கொள்வதற்கு எமக்கு விருப்பம் இல்லை. ஆனால் சங்கரி ஐயா உடன்படுகிறார் இல்லை. யாழ்ப்பாணத்தில் விட்டுக் கொடுத்தாலும், வவுனியாவில் இளைஞர்கள் மத்தியில் புளொட்டை மறக்கச் செய்து புதிதாகச் சூரியனைக் காட்ட முடியாது” என்றார் சித்தார்த்தன்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி குழுவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் உதய சூரியன் சின்னத்தைத் தற்காலிமாகப் பயன்படுத்த தேர்தல்கள் தலைமையகம் அனுமதி வழங்கியதென்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply