சாலைகள், கார்கள், வீடுகள், தெருக்களில் கண்டெடுக்கப்பட்ட 3 ஆயிரம் உடல்கள் : கொரோனாவால் அதிருந்து போன நாடு
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், போலிவியா போன்ற நாடுகளில் வைரஸ் தாக்குதல் காரணமாக பலர் வீடுகளிலேயே உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் குழப்பம் நிலவி வரும் போலிவியாவில் வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது.
நாட்டில் இதுவரை 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், இது உண்மையான தகவல் இல்லை எனவும், வைரஸ் பாதிப்பும், அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளும் மிக அதிகம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை மருத்துவமனைக்கு வெளியே வீடுகள், சாலைகள், தெருக்கள், கார்கள் என பல்வேறு இடங்களில் உயிரிழந்த 3 ஆயிரத்து 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுளளதாக போலிவிய தடயவியல் புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உயிரிழப்புகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என கருத்துக்கள் நிலவி வருகிறது.
இதற்கிடையில் ஜூலை 15 முதல் ஜுலை 20 வரை மொத்தம் 400-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலிவிய போலீசார் தெரிவித்துள்ளனர். உடல்கள் அனைத்தும் மருத்துவமனைக்கு வெளியே மீட்கப்பட்டுள்ளது.
அதாவது உடல்கள் சாலைகள், தெருக்கள், வீடுகள், கார்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உடல்களை ஆய்வு செய்தபோது உயிரிழந்தவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரசியல் குழப்பத்தால் திணறிவரும் போலிவியா கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply