‘சின்னப்’ பிரச்சினையால் முறிந்த கூட்டணி
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கு நடை பெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து அமைத்திருந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா) ஆகிய கட்சிகள் இணைந்து ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டணியொன்றை ஏற்படுத்தியிருந்தன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட இக்கூட்டணி முன்னர் இணங்கியிருந்தது.
எனினும், கூட்டணிக்கான சின்னத்தைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட முரண்பாடுகளால் கூட்டணி முறிவடைந்துள்ளது. இம்முறை தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டுமென அக்கட்சி தெரிவித்திருந்தது. ஆனால், ஏனைய கட்சிகள் அதற்கு இணங்கவில்லை. இதனால் கூட்டணி முறிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா) ஆகிய கட்சிகள் இணைந்து வவுனியாவில் புளொட் அமைப்பின் நங்கூரச் சின்னத்திலும், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் சின்னத்திலும் போட்டியிடுவதற்கு இணக்கம் கண்டுள்ளன.கூட்டணி முறிவடைந்தமை குறித்துத் தான் எந்தவிதமான கவலையும் அடையவில்லையெனத் தெரிவித்திருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, தனது கட்சிசார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலைத் தானே தயாரிக்கவுள்ளதாகக் கூறினார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாத் தேர்தல்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply