மடுமாதா ஓகஸ்ட் திருவிழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
மடுத்திருப்பதியின் ஆகஸ்ட் மாத திருவிழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிணங்க ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய தெற்கிலிருந்து கத்தோலிக்க ஆயர்கள், அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் கொண்ட குழுவொன்று நேற்று முன்தினம் மடுத் திருப்பதிக்குச் சென்று அதற்கான முன்னேற்பாடுகளை மேற் கொண்டுள்ளது. இக்குழு மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையை மறை மாவட்ட ஆயரில்லத்தில் சந்தித்துள்ளதுடன் ஆகஸ்ட் திரு விழாவை விமர்சையாகக் கொண்டாடுவது தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டுள்ளது.
இந் நிகழ்வில் மன்னார் ஆயருடன் மன்னார் மாவட்ட அரச அதிபர் நிக்கலஸ் பிள்ளை, மன்னார் மாவட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இக்கலந்துரையாடலுக்கமைய திருவிழாவுக்கு நாடெங்கிலுமிருந்து வருகை தரும் யாத்திரிகளுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிட வசதிகள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இது பற்றி ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் அறிவிப்பதென முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பொறுப்பை இந்நிகழ்வில் கலந்து கொண்ட விமான சேவைகள் பிரதியமைச்சர் சரத் குணரத்ன ஏற்றுக் கொண்டதுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
தெற்கிலிருந்து நேற்று முன்தினம் மடுத்திருப்பதிக்கு சென்ற தூதுக் குழுவில் காலி மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு ஹெரல்ட் அந்தனீ, டொன் பொஸ்கோ நிறுவனத்தின் அருட்தந்தை அந்தனி ஹியூமர் அடிகளார், கரித்தாஸ் நிறுவனப் பணிப்பாளர் வண. டேமியன் பெர்னாண்டோ அடிகளார், அமைச்சர்களான தயாஸ்ரீ த திசேரா, பிரதி அமைச்சர் சரத் குணரத்ன, வடமேல் மாகாண சபை உறுப்பினர் திரேசா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply