யாழ் மாநகரசபையில் உதயசூரியன்; வவுனியா நகரசபையில் நங்கூரம்; சின்னப் பிரச்சினை தீர்ந்தது

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகளுக்குள் தோன்றியிருந்த சின்னம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா) ஆகிய கட்சிகளுக்கிடையில் தோன்றிய கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஒரே கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்தன.

இதற்கமைய யாழ் மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலும், வவுனியா நகரசபைத் தேர்தலில் புளொட் அமைப்பின் நங்கூரச்சின்னத்திலும் போட்டியிட இணங்கியிருந்தனர்.

முதலில் சின்னத்தைத் தேர்வுசெய்வதில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் தனித்துப்போட்டியிடவும், புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடவும் தீர்மானித்தன. இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் மீண்டும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

“இதுவொரு ‘சின்ன’ப் பிரச்சினை. இதற்காகச் சண்டையிடுவது முட்டாள் தனம்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கூறினார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்குப் பலர் முன்வந்திருப்பதாகக் கொழும்பு ஊடகமொன்றிடம் சுட்டிக்காட்டிய ஆனந்தசங்கரி, அவர்களிலிருந்து பொருத்தமானவர்களைத் தாம் தெரிவுசெய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசைபத் தேர்தல்களில் ஈ.பி.டி.பி. கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply