கிழக்கில் 98 சதவீத குடும்பங்கள் மீளக் குடியமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2006ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையின் போது அகதிகளாக இடம் பெயர்ந்திருந்த 35 ஆயிரத்து 500 குடும்பங்களில் 98 சத வீதமானவை இது வரை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட புனர்வாழ்வு செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்நாளில், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளிலிருந்து 35 ஆயிரத்து 537 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 599 பேர் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி இக்குடும்பங்களில் இதுவரை 34 ஆயிரத்து 919 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 688 பேர் மீளக் குடியேற்றப்பட்டுள்ளனர்.

புலிபாய்ந்தகல் பிரதேசத்திலுள்ள ஈரழற்குளத்தைச் சேர்ந்த 618 குடும்பங்களைக் கொண்ட 2951 பேரே மீள் குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.

அப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் அறிக்கை கிடைத்த பின்பே இக்குடும்பங்கள் மீளக் குடியேற்றப்படும்.

மேற்குறிப்பிட்ட குடும்பங்களில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் பலாச்சோலை மற்றும் மாவடிவேம்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அதே வேளை, 576 குடும்பங்களைச் சேர்ந்த 2573 பேர் தொடர்ந்தும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.

அக்காலப் பகுதியில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து 7291 குடும்பங்களைச் சேர்ந்த 21,811 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருந்தனர்.

இவர்களில் 6621 குடும்பங்களைச் சேர்ந்த 19,584 பேர் அங்கு மீளக்குடியேறி விட்டனர். எனினும், குறிப்பாக மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 677 குடும்பங்களைச் சேர்ந்த 2277 பேர் தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ளனர்.

10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 542 குடும்பங்களைக் கொண்ட 1818 பேர் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் 135குடும்பங்களைச் சேர்ந்த 469 பேர் ஆகியோரைக் கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமுக்குக் கட்டங்கட்டமாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply