மக்களின் மனங்களை வெல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுக

வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு, அரச அதிகாரிகள் கடமைக்கும் அப்பால் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று தசாப்த காலமாக அபிவிருத்தியின் நிழலைக் கூட கண்டிராத மக்கள் உள்ளனர். எனவே, இலக்கு மாறாமல் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அரச பணியாளர்கள் சேவையாற்ற வேண்டுமென்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இலங்கை கொள்கைத் திட்டமிடல் சேவைக்குப் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நேற்று (ஜூன். 20) நியமனக் கடிதங்களை வழங்கினார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், 656 பேருக்குப் புதிதாக நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச வருவாய்த்துறை அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அவ்வமைச்சின் செயலாளர் சுமித் அபேசிங்க, அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன, மற்றும் அரச சேவையின் உயர் அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:-

“இலங்கை கொள்கைத் திட்டமிடல் சேவை ஆரம்பிக்கப்பட்டு 24 வருடங்கள்தான் ஆகின்றன. மிகவும் இளமையான சேவை இது. அபிவிருத்தி செயற்பாடுகளில் இந்தச் சேவை பெரும் பங்களிப்பைச் செய்துவருகிறது. புதியதொரு யுகத்தை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் புதியவர்கள் நியமனம் பெறுகிறார்கள். அதேநேரம், ஒரு சுதந்திரமான நாட்டில் நியமனம் வழங்கப்படுகிறது. எந்த மாகாணத்திலும் சென்று பணிபுரிந்தாலும் அச்சமின்றிக் கடமையாற்றும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாம் நாட்டுக்குப் பொருத்தமான தீர்வினைத் தந்திருக்கின்றோம். எம்மவர்கள்தான் இதற்கு ஆலோசனை வழங்கினார்கள். மஹிந்த சிந்தனையின் 10 ஆண்டு அபிவிருத்தி தேவேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை செல்கிறது. வடக்கின் வசந்தம் துரிதமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மட்டுமன்றி முழு நாடும் அபிவிருத்தியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்தி இலக்கின் பின்னால் சென்று அதனைப் பெற்றுக்கொடுக்க அரச துறை அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது.

து பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காகக் காரணம் கூறும் காலமல்ல. சேவையைக் கைவிட்டுவிட முடியாது. இன்று அரச துறையில் 11, 12 இலட்சம் பேர்வரை உள்ளனர். அதனை 6,7 இலட்சமாகக் குறைப்பதற்கு நாம் தீர்மானிக்கவில்லை. அதிலிருந்தே அதிகரித்திருக்கின்றோம். ஓர் இலட்சத்திற்கும் அதிகமான புதிய பதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். சுமார் மூன்று இலட்சம் பேர் புதிதாக உள்Zர்க்கப்பட்டுள்ளார்கள். அரச சேவையைப் பலப்படுத்துவதற்கு இந்த அரசுதான் நடவடிக்கை எடுத்துள்ளது. பணியாளர்களின் தொகையைக் கூட்டினால் மாத்திரம் அபிவிருத்தி ஏற்பட்டுவிடாது. அதன் சிறப்பான செயற்பாட்டில்தான் அது தங்கியிருக்கிறது.

மூன்று தசாப்தமாக அபிவிருத்தியின் நிழலைக் கூட கண்டிராத மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ளனர். நாம் அந்த மனங்களை வெல்ல, கடமைக்கும் அப்பால் சென்று செயலாற்ற வேண்டும். மனிதாபிமான நடவடிக்கையின் போது எமது நோக்கு ஒரே குறிக்கோளைக் கொண்டதாகவே இருந்தது. அதே போல் அபிவிருத்தியிலும் இலக்குத் தவறாமல் செயற்பட வேண்டும். 50 மில்லியன் பெறுமதியான 500 அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை குறித்த காலத்தில் நிறைவு செய்யவேண்டும்.

இன்று நாம் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மீண்டும் இந்த நாட்டில் இருண்ட யுகத்தின் நிழலைக் கூட படியவிடக் கூடாது. கிராமம், தோட்டம், நகரம், வடக்கு, கிழக்கு எல்லா இடங்களிலும் அபிவிருத்தி சென்றடைய வேண்டும். கஷ்டப் பிரதேசம் என்ற பதமே இருக்கக் கூடாது. அதற்கு அரச பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply