அநுராதபுரச் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு

நீதிமன்ற விசாரணைகள் எதும் நடத்தப்படாமல், விடுதலைப்புலி சந்தேக நபர்களாக கருதி தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஜனாதிபதிக்கான எமது இக்கடிதத்தை அவருக்கு அனுப்பிவைத்து, எங்களுக்கு கருணையுடன் பொது மன்னிப்பு வழங்குவதற்கு உதவுமாறு வேண்டுகின்றோமென அநுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டள்ள 25 தமிழ் அரசியல் கைதிகள் கேட்டுள்ளனர்.

அநுராதபுரச் சிறைச்சாலையில் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டள்ள இவர்கள், தங்களை விடுதலை செய்யுமாறும் அல்லது தங்கள் மீது விசாரணை நடத்துவதாயின் அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பெ. இராதாகிருஷ்ணனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் மக்கள் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

அநுராதபுர சிறைச்சாலையில் 01.09.2006 இல் பயங்கரவாத சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட கோவிந்தசாமி திருச்செல்வம், கருப்பையா ஜெகதீஸ்வரன், ஜெயவர்தனன் சாந்தகுமார், மைக்கல் ஜஸ்டின், 30.12.2006 இல் கைதான நடராஜா ஜெகதீஸ்வரன், 14.04.2006 இல் கைதான சந்தனம் நவரட்ணம், 29.09.2006 இல் கைதான பேரின்பநாதன் அருட்குமார், குணரட்னம் உதயகுமார், சொர்ணலிங்கம் ஆதவன், செல்வராசா தயாநேசன்,மகாலிங்கம் முருகையா ஆகியோரும் 23.03.2007 இல் கைதான ரகு செந்தூரன், 30.03.2007 இல் ரவிந்திரன் நிதர்ஷன், 31.03.2007 இல் கைதான பரம்சோதி தயானந்தன், செல்லையா சதீஸ்குமார், கிறிஸ்டோபர் அட்ரன், செல்லதுரை விக்னேஸ்வரராஜா ஆகியோரும் 28.01.2008 இல் கைதான தியாகராஜா பிரபாகரன், 30.09.2008 இல் கைதான மகாலிங்கம் பாஸ்கரன், 28.10.2008 இல் கைதான சின்னத்துரை கௌதமன், 16.12.2008 இல் கைதான சிவலிங்கம் தினேஸ்குமார், வீரசிங்கம் ராஜா, 17.12.2008 இல் கைதான சிவபாலன் சசிகரன், 22.12.2008 இல் கைதான அலெக்சாண்டர் அலெக்ஸ்ஜெகன் ஆகிய இருபத்தைந்து கைதிகளே இவ்வாறு கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

விடுதலைப்புலி சந்தேக நபர்களாக கருதி தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்கள் மீது, நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படாமல் தொடர்ச்சியாக தவணைப் பிரகாரம் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மறுபடியும் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்படுகின்றோம். எனவே எங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதிக்கான இக் கடிதத்தை அனுப்பிவைத்து, எங்களுக்கு கருணையுடன் பொது மன்னிப்பு வழங்குவதற்கு உதவுமாறு வேண்டுகின்றோம்.

நீண்ட காலமாக குடும்பங்களை விட்டு பிரிந்துள்ள எங்களுக்கு உங்களது அன்பும், அனுசரணையுமே துணையாக இருக்கின்றது என்று நம்புகிறோம். அத்துடன் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் எங்களது வேண்டுகோள் கடிதங்களை அனுப்பிவைத்து உதவுமாறு வேண்டிக் கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply