மன்னாரில் மீன்பிடித்தடை முற்றாக நீக்கம்

மன்னார் கடற் பிரதேசத்தில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் யாவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஆலோசனையின் பிரகாரம் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை நேற்று முதல்  அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தலைமன்னார் கடற்படை இறங்குதுறையில் வைத்து மன்னார் மீனவர்களை நேற்று முன்தினம்  சந்தித்த பெசில் ராஜபக்ஷ எம். பி. இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.இதன்படி கிழக்கு மற்றும் யாழ். குடா மீனவர்களுக்கு 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடலில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 14 ஆம் திகதி நீக்கப்பட்டதோடு, யாழ். குடா மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 19 ஆம் திகதி நீக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களில் 60 வீதமானவர்கள் மீன்பிடித் தொழிலை தமது பிரதான ஜீவனோபாயமாக கொண்டுள்ளனர். 63 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இவ்வாறு மீன் பிடித்துறையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக மீன் பிடித்துறை முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 19040 மெற்றிக் தொன் மீன் பிடிபட்டது. இந்தத் தொகை 2007 ஆம் ஆண்டாகும் போது 9170 மெற்றிக் தொன்னாகக் குறைந்தது. மன்னார் மாவட்ட மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து பெசில் ராஜபக்ஷ எம்.பி. யின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், அவற்றுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுத்தார்.

இது கால வரை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மன்னார் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மீனவர்களின் கோரிக்கைப்படி தற்போது 7 தினங்களும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. மீன்பிடிப் படகு இயந்திரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டது. இதன்படி 15 குதிரை வலு கொண்ட படகு இயந்திரங்களை பாவிக்க நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. ஆழ்கடல் மீன்பிடிக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

இது தவிர மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள், மீன்பிடி உபகரணங்கள் வழங்குவதற்காக 275 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்தோடு ஓய்வு அறைகள், குளிரூட்டப்பட்ட அறைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 180 நாள் திட்டத்தினூடாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

குளிரூட்டிகள், ஐஸ் உற்பத்தி நிலையங்கள் என்பன அமைக்க கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற் பரப்பிற்கு வந்து மீன்பிடிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையில் கடற்படையினருக்கு நேரடியாகத் தலையிட முடியாது எனவும், மன்னார் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை ஆரம்பிப்பதோடு இந்திய மீனவர்களின் வருகை குறையும் எனவும் பெசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply