பயங்கரவாதத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்ய நடவடிக்கை
பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாடு எதிர்கொண்ட இழப்புக்களை விரைவில் ஈடுசெய்வதற்குரிய நடவடிக்கைகள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்தார்.இதன் மூலம் உலகின் தர்மதுவீபம் என்ற கெளரவத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
நாம் பெற்றுக் கொண்டுள்ள வெற்றி நாட்டில் நிரந்தரமான சமாதானத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு உட்பட சகல மக்களும் இதனை சமமாக அனுபவிக்கவும் சகலரும் அச்சம் பயமின்றி வாழும் சூழ் நிலையை ஏற்படுத் தவும் வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. இதற்கு சகல மகாநாயக்க தேரர்களினதும் ஆசிகள் அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமரபுர மற்றும் ராமண்ய நிகாய ஆகியன இணைந்து பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக நாட்டை மீட்டுள்ளமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கெளரவமளித்து பாராட்டுப் பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மகாநாயக்கர்களின் ஆசீர்வாதம் முழுமையாகக் கிடைத்துள்ளது.
நாட்டு மக்களின் ஐக்கியத்துக்காகவும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த படைவீரர்களுக்காகவும் விகாரைகள் தோறும் வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன், இரத்ததான நிகழ்வுகளும் இடம்பெற்றதைக் குறிப்பிட்டாக வேண்டும். படையினரின் குடும்பத்தினருக்கு கெளரவமளிக்கவும், அவர்களின் அர்ப்பணிப்பு பற்றி மக்களுக்கு உணர்த்துவதிலும் இவ்வழிபாடுகள் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளன. இதனால் இந்த வெற்றி எமது பாரம்பரியத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.
மஹாநாயக்கர்களின் பணிகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. உங்களைப் போன்றே எமக்குப் பெரும் பொறுப்புகள் உள்ளன. நாட்டில் பாரிய மறுமலர்ச்சி உருவாகியுள்ளது. மீண்டும் வணக்கஸ் தலங்களுக்கு பயமின்றி சுதந்திரமாக யாத்திரை செல்லும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது.
பொது இடங்களில் புகைப்பதை இப்போது காணமுடிவதில்லை. எமது இளைஞர்கள் பொது இடங்களில் பண்பாக நடந்து கொள்வதை காண முடிகிறது. அவர்கள் கெளரவமாக செயற்படுகின்றனர்.இரு பெளத்த மகா பீடங்களும் இணைந்து வழங்கியுள்ள இந்த கெளரவத்தை தாய்நாட்டுக்கு கெளரவம் பெற்றுக் கொடுக்க நான் உபயோகிப்பேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்றைய இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன, முப்படைத் தளபதிகள் ஆகியோருக்கும் பெளத்த மகாநாயக்க பீடங்களின் கெளரவம் வழங்கப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply