நாமர்க்கும் குடியல்லோம் என்ற வாழ்க்கையை ஐக்கிய இலங்கைக்குள் நாங்கள் காண விரும்புகின்றோம்: ஈபிஆர்எல்எவ் செயலாளர் சிறிதரன்

பத்மநாபாவும் 12 தோழர்களும் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நாளை வருடந்தோறும் தியாகிகள் தினமாக அனுஷ்டித்து வரும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தமிழ் பேசும் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தமது உயிரை அர்ப்பணித்த தனது கட்சியின் போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் வகையில் 19.06.2009 அன்று தியாகிகள் தினத்தை அனுஷ்டித்தது.

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தி. சிறிதரன், புளொட் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கஜன் ஆகியோர் குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். பொதுச்செயலாளரால் கட்சியின்கொடி ஏற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் உருவப்படத்திற்கு கட்சி உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்தனர். உயிர் நீத்தோரின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கடசியின் நலன் விரும்பிகள் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து கங்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய செயலாளர் மோகன், கட்சியின் செயலாளர் சிறிதரன் ஆகியோர் உரையாற்றினர்.

இவ்வருடம் தியாகிகள் தினத்தில் ஐக்கியத்தை வலியுறுத்துவதையே எமது கோஷமாக ஆக்கியுள்ளோம் ஐக்கியத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதால் போலியாக நாம் கூறவில்லை. தமிழ் மக்களின் அபிலாiஷகளை ஈட்டவதற்கு இன்றைக்கு அவசியமானதாயுள்ளது. என கட்சியின் யாழ் பிராந்திய செயலாளர் மோகன் தெரிவித்தார்.

பல்வேறு துன்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் நாங்கள் முகம் கொடுத்தாலும் எமது பிரதேசங்கள் விருத்தி செய்யப்பட வேண்டிய தேவையும் எங்கள் முன்னால் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் தி. சிறிதரன்:

ஈழவிடுதலைப்போராட்டம் எப்போது தோற்றது என்று கேட்டால் எப்போது ரெலோ இயக்கத்தை சேர்ந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு வீதியில் வீசப்பட்டார்களோ, அக்கொலைகளை புரிந்தவர்களுக்கு கொக்கோகோலா உடைத்து கொடுத்து பெருமிதம் அடைந்தார்களோ அன்றைக்கு ஈழவிடுதலை போராட்டம் தோற்றுப்போனது.

யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் இதனை கூற வரவில்லை கடந்தகால நடவடிக்கைகளை பழிவாங்கும் உணர்வோடு பார்க்கவில்லை. பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்ற உணர்வோடுதான் பேசுகின்றோம்.

எங்களுடைய சமூகத்தில் மனிதர்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகத் தான் நாங்கள் போராட புறப்பட்டோம். தவறாக வழிநடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் தொடபான வேதனையும் எங்களுக்கு இருக்கிறது.

வேறுபட்ட கருத்துக்களுடன் வாழ்வதற்கான உரிமை இந்த சமூகத்தில் இல்லாமல் போய்விட்டது. எங்களுடைய தோழர்கள், சக இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் பல கனவுகளுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்கள். அந்த கனவுகளுடன் புறப்பட்டவர்களை கொல்வதற்கான உரிமையை இங்கு ஒரு இயக்கம் எடுத்துக்கொண்டது.

தமிழ் சமூகத்தின் பெறுமதி வாய்ந்த மனிதர்கள் தேடித் தேடி அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று இந்த சமூகத்திற்கு தலைவர்களே இல்லை என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டு சமூகம் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது.

எங்களை தவிர எல்லோரும் பிழை நாங்கள் மட்டும்தான் சரியானவர்கள் என்று கருதுகின்ற போக்கு தலையெடுத்திருக்கின்றது எங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஆதிக்க குணமும், பிற்போக்கு தனமான போக்குகளும் தான் எங்களை இந்த நிலைமைக்கு கொண்டுவந்திருக்கிறது.

இங்கு ஒரு ஜனநாயக சூழல் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. தற்போது பல்வேறு கஷ;டங்கள் இருக்கிறது போக்குவரத்து கஷ்டங்கள் இருக்கிறது, சோதனை சாவடிகள் இருக்கிறது. இவை அகன்று நாங்கள் இங்கு சுதந்திரமாக நடமாடக்கூடிய காலம் வரவேண்டும். ஆயுத வன்முறைகள் அனைத்தும் அற்றுப்போக வேண்டும். தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு சுய நிர்வாகம் உருவாக வேண்டும். அத்தகைய ஒரு நிர்வாகம் உருவாவதற்கான ஏதுநிலைகள் இருப்பதாக நாங்கள் திடமாக நம்புகின்றோம். எங்களுடைய விவகாரங்களை தமிழ் பிரதேசத்தில் நாங்களே பார்க்கக் கூடிய அதிகார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நாமர்க்கும் குடியல்லோம் என்ற வாழ்க்கையை ஐக்கிய இலங்கைக்குள் நாங்கள் காண விரும்புகின்றோமென தனது உரையில் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply