இந்திய உதவிப்பொருள்களை மக்களுக்கு விநியோகிப்பது யார்?

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகிப்பதற்கென இந்தியா வழங்கியிருக்கும் உதவிப்பொருள்கள் இலங்கையை வந்தடைந்திருக்கின்றபோதும், அவற்றை விநியோகிக்கப்போவது யார் என்பதில் ஒரு குழப்பம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் தலைமையிலான தூதரக அதிகாரிகள் நேற்றையதினம் 1650 தொன் அளவான இந்த உதவிப்பொருள்களை களனிப் பிரதேசத்திலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க களஞ்சியத்தில் அதன் தலைவர் போல் கஸ்ரெலோ மற்றும் இலங்கை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரத்ன ஆகியோரிடம் கையளித்தனர்.

இந்த உதவிப்பொருள்களின் விநியோகத்தை சம்பந்தப்பட்ட அரசாங்க முகவர்கள் கையாள்வார்கள் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்திய அதிகாரிகளிடமிருந்து இந்த உதவிப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு செஞ்சிலுவைச் சங்கம் அவற்றை விநியோகிக்கும் என்று சங்கத்தின் தலைவர் கஸ்ரெலோ கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கம் முதற்தடவையாக முரண்பாட்டினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இந்திய அதிகாரிகள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நாம் மகிழ்வுடன் வரவேற்கின்றோம். இது இலங்கையில் செஞ்சிலுவைச் சங்கம் ஆற்றிவரும் பணிகளுக்கான ஒரு அங்கீகாரமாக அமைந்துள்ளது என கஸ்ரெலோ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் பற்றித் தம்மிடமுள்ள சுயாதீனமான தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு இந்திய உதவிப்பொருள்கைள செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாகக் கையளிக்கும் என்று முன்னதாக புதுடில்லியில் செஞ்சிலுவைச் சங்கத் தூதுக்குழுவுக்குத் தலைமைதாங்கிய பிரான்ஸோய்ஸ் ஸ்ரம் கூறியிருந்தார்.

எனினும், இந்தப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் அரசாங்கமே மக்களுக்கு விநியோகிக்கும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திவாரத்ன உறுதிபடக் கூறியுள்ளார்.

இந்த உதவிப்பொருள்களை எந்தப் பாதையால் வன்னிக்கு எடுத்துச்செல்வது என்பதுபற்றி வடபகுதி அரசாங்க அதிகாரிகள், ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் இன்று கூடி ஆராயவுள்ளனர்.

இந்த உதவிப்பொருள்கள் A-9 வீதியூடாக வவுனியா, புளியங்கும் பிரதேசங்களைக் கடந்து, நெடுங்கேணி, ஒட்டிசுட்டான பிரதேசங்களினூடாக உரிய இடங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆஇணாயளர் திவாரத்ன கூறியுள்ளார்.

இதேவேளை, இந்திய-இலங்கை கூட்டு உடன்படிக்கைளின் பிரகாரம் ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக இந்த உதவிப்பொருள்களை இந்தியா இலங்கையிடம் கையளித்திருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்றைய ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply