உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை பைடன், கமலா ஹாரிசுக்கு குவியும் வாழ்த்துகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். இதேபோல் அக்கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.
வெற்றிச் செய்தி வெளியானதும், இருவருக்கும் இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மெகபூபா முப்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நமது பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் நெருக்கமான நட்புறவை இந்தியா எதிர்பார்ப்பதாக சோனியா காந்தி கூறி உள்ளார்.
ஜோ பைடன் தனது தலைமையில் அமெரிக்காவை ஒருங்கிணைத்து வலுவான பாதையில் அந்நாட்டை வழிகாட்டுவார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதேபோல் இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராவதை நினைத்து பெருமிதம் கொள்வதாகவும் ராகுல் கூறி உள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக பதவியேற்க தகுதி பெற்றுள்ள பைடன், கமலா ஹாரிசுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மன் தலைவர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply