சிறுபான்மையின மதத்தவரின் உரிமைகளை மதிக்கவும்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்தும்போது, சிறுபான்மையின மதத்தவரின் உரிமைகளை மதிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு, அம்னஸ்டி இன்டர்னெஷனல், இலங்கை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தது.

இதன் அடிப்படையில், சிறுபான்மை மதத்தவர்களின் உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை தகனம் செய்வது, குறித்த சமூகத்தின் மத நம்பிக்கைக்கு எதிரானது என்று, இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தாலும் எதிர்க்கட்சியாலும் கவலை வெளியிடப்பட்டு வந்த நிலையிலேயே, அம்னஸ்டி இன்டர்நெஷனல், இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை தகனம் செய்தல் என்ற நிலைப்பாட்டில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும் எனினும், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பொறுத்து திருத்தம் செய்ய முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அத்துடன், வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு, தொலைதூர பகுதியொன்றைத் தேடும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என, அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் சுகாதார அதிகாரிகளே, இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply