கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் முயற்சி : சம்பவ இடத்தில் துப்பாக்கி பிரயோகம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற பகுதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு என்பதனால் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்று சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் மீதே வவுனியா கற்பகபுரம் 4ஆம் கட்டை பகுதியில் வைத்து மது போதையிலிருந்த இளைஞர் குழு தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளதுடன், அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.
மன்னாரிலிருந்து நேற்று மாலை வவுனியா நோக்கி எஸ்.வினோநோகராதலிங்கம் வாகனத்தில் பயணித்துள்ளார். இதன் போது வவுனியா கற்பகபுரம் 4ஆம் கட்டை பகுதியில் இரவு 7 மணியளவில் இளைஞர் குழுவொன்று அவரின் வாகனத்தினை வழி மறித்துள்ளனர்.
அதனையடுத்து வாகனத்திலிருந்து அவர் கிழே இறங்கி இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட போது மது போதையில் காணப்பட்ட இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதுடன் அவரின் வாகனத்தின் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினருடன் பயணித்த அமைச்சின் பாதுகாப்பு பிரிவினால் வழங்கப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரையோகம் மெற்கொண்டார்.
இதனையடுத்து மது போதையில் காணப்பட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அதன் பின்னர் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரை ஏற்றிக்கொண்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply