‘வசந்தம்’ தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி தமிழில் வாழ்த்து
முப்பது வருட காலம் பயங்கரவாதத்தினால் அதிகளவு பாதிப்பிற்குள்ளான வடக்கு, கிழக்கு மக்களுக்கு ‘வசந்தம்’ புதிய தமிழ் தொலைக்காட்சிச் சேவை மகிழ்ச்சியைப் பெற்றுத் தருவதாக அமையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.‘வசந்தம்’ தொலைக்காட்சிச் சேவையினூடாக தமிழ் மொழி பேசும் மக்களின் கல்வி, கலாசாரம், சமூக மற்றும் சமயத் துறைகளுக்கான புதிய பிரவேசம் உருவாவது உறுதியெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முற்றிலும் தமிழ் மொழி மூல சேவையை வழங்கும் ‘வசந்தம்’ தொலைக்காட்சிச் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது ஒளித்திரை மூலம் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்நாட்டில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்காக சுயாதீன தொலைக்காட்சிச் சேவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள வசந்தம் தொலைக்காட்சி சேவைக்கு நான் மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையிலும் வசந்தம் வீசட்டும் என வாழ்த்துகிறேன்’ எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர்களான ஏ. எல். எம். அதாவுல்லா, விநாயகமூர்த்தி முரZதரன், எம். எஸ். எஸ். அமீரலி, வன்னி மாவட்ட எம். பி. சிவநாதன் கிஷோர், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வசந்தம் தமிழ் தொலைக்காட்சிச் சேவை தினமும் காலை 6.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை தமது சேவையை வழங்கவுள்ளது. கலை, கலாசாரம், சமய மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இச்சேவையில் தினமும் தமிழ் செய்திகளும் இடம்பெறுகின்றன.
தினமும் பிற்பகல் 1.00 மணி, மாலை 6.00 மணி இரவு 8.00 மணிக்கும் மூன்று தமிழ்ச் செய்திகள் ஒளிபரப்பப்படவுள்ளதென சுயாதீன தொலைக்காட்சிச் சேவை தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply